ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

ஆன்மிக தகவல்கள்

How to be Ekadasi fasting?

விரதங்களில் முக்கியமானது ஏகாதசி விரதம் ஆகும்.

அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். ஏகாதசித் நாளில்தான் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஏகாதசி அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, மகா விஷ்ணுவின் திருநாமங்களை உச்சரித்தபடி வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

ஏகாதசி நாளில் விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.

விரதத்தை எப்படி அனுசரிப்பது?

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது.
விரதத்தின்போது தாகத்திற்கு தண்ணீர் குடிக்கலாம்.
உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.